தமிழ்நாட்டில் நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பேணிக்காத்திடவும், மேம்படுத்திடவும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் அரசாணை (நிலை) எண் 70, சுற்றுலா (ம) பண்பாட்டுத் துறை, நாள் 26.04.2007 வாயிலாக தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் கீழ் குறிக்கப்பட்ட கலைகள் தவிர தமிழக நாட்டார் நிகழ்த்திய கலைகள் – களஞ்சியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 100 நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிப்போரையும், நிகழ்த்துவோரையும் நாட்டுப்புறக் கலைஞர்களாக இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை) எண் 171, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, நாள் 26.07.2012ல் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு ரூ.10.00 இலட்சம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஆண்டொன்றுக்கு ரூ.25.00 இலட்சம் என மொத்த மானியமாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டது.
அரசாணை (நிலை) எண் 132, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள் 17.09.2019ல் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அவ்வகையில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி, கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கருக்கலைப்பு / கருச்சிதைவு நிதியுதவி, இயற்கை மரணம் / ஈமச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரண உதவித் தொகை ஆகிய நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
18 வயது முடிவடைந்த ஆனால் 60 வயது முடிவடையாத நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர் உறுப்பினராவதற்குத் தன்னுடைய பெயரை வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கலைஞர்களிடம் பதிவுக்கட்டணமாக ரூ. 100/-ம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் கட்டணமாக ரூ. 10/- மற்றும் அடையாள அட்டைகள் காணாமல் போனால் இரண்டாம்படி அடையாள அட்டை வழங்க ரூ. 20/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்கள் மாவட்டம் அமைந்துள்ள கலை பண்பாட்டுத் துறையின் மண்டல அலுவலகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சென்னையில் உள்ள கலை பண்பாட்டு இயக்ககத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் வாரியத்தில் இதுநாள்வரை 50,882 கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உறுப்பினராகப் பதிவுபெற்ற 9,011 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக இதுநாள்வரை ரூ.1,98,72,917/-வழங்கப்பட்டுள்ளது.