மாநில அளவிலான கோடைக்கால / குளிர்கால கலை பயிற்சி முகாம்
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் கோடைக்கால மற்றும் குளிர்கால விடுமுறைகளில் மாநில அளவிலான கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்படும் குளிர்கால முகாமில் ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். இம்முகாமில் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம். குரலிசை, ஓவியம், கைவினை, சிலம்பம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன மற்றும் இதே பிரிவுகளில் 100 மாணாக்கர்கள் பங்குபெறும் வகையில் கோடைக்கால முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவிலான கைவினை பயிற்சி முகாம்
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் மாநில அளவிலான கைவினை கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மண்ணிலான கலைப் பொருட்கள் செய்தல், பொம்மை செய்தல். துணி ஓவியம், கைவினை, மெழுகுவர்த்தி செய்தல் மற்றும் உள்ளிட்ட கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இம்முகாம்கள் மாணாக்கர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களது தன்னம்பிக்கையினை வளர்க்கவும் ஒரு அரிய வாய்ப்பாக திகழ்கிறது
தேசிய அளவிலான பாலஸ்ரீ விருது (மாவட்ட / மாநில / தேசிய அளவில்)
புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் தேசிய பாலஸ்ரீ விருதிற்கான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியானது மேடைக்கலை, படைப்புக்கலை, அறிவியல் கலை மற்றும் எழுத்துக்கலை ஆகிய நான்கு வகையான முதன்மைக் கலைகளை உள்ளடக்கிய 16 வகை கலைகளில் 10 முதல் 12 வயது வரையிலும், 12 முதல் 14 வயது வரையிலும் மற்றும் 14 முதல் 16 வயது வரையிலும் உள்ள மாணாக்கர்களிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகள் ஜுன் / ஜுலை மாதத்திலும். மாநில அளவிலான போட்டிகள் ஆகஸ்டு / செப்டம்பர் மாதத்திலும், அதில் தெரிவு பெறுபவர்களிடையே தேசிய அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த சிறார்களுக்கு “தேசிய பாலஸ்ரீ விருது” தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மாவட்ட அளவிலான போட்டிகள் மாநில அரசின் நிதியுதவியிலும், மாநில அளவிலான போட்டிகள் புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தின் நிதியுதவியிலும் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான போட்டிகள் புதுதில்லி தேசிய சிறுவர் மன்றத்தால் நடத்தப்படுகிறது.
இந்திய அரசின் மாண்புமிகு மனிதவள மேம்பாட்டு அமைச்சரால் தேசிய பால் ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களுக்கு தலா ரூ.15,000/- (கிசான் விகாஸ் பத்ரா) மற்றும் பாராட்டுப் பலகை, இலக்கியத் தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து தேசிய பால்ஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு ரூ.15,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கி தமிழக அரசு ஊக்குவிக்கிறது.